செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதிகளில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று (6) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைவதால் அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டும் என சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என அரசியலமைப்பு கூறுகின்றது அத்தோடு அந்த பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான விதிகள் எதுவும் அரசியலமைப்பில் இல்லை.
இறுதியாக ஜனாதிபதி 18 நவம்பர் 2019 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முந்தைய ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கே புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த தேர்தல் செப்டெம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 18 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பு தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை போன்று இந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படலாம் என பலரும் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு மாற்று வழிகள் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க முடியாது என சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.