2022ல் ‘வெளிநாட்டு சதி’ தன்னை பதவியில் இருந்து நீக்கியது : கோட்டாவின் புத்தகத்தில் கூறப்பட்ட கதை

CBC TAMIL NEWS : வெளிநாட்டு தலையீட்டின் விளைவாகவே 2022 இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன்னர் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததாகவும், இதற்காக வெளிநாட்டுடன் இணைந்து சில உள்ளூர் குழுக்கள் செயற்பட்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற அவரது புத்தகத்தின் ஒரு பகுதியாகும்.

கோட்டாவின் அரசியல் வாழ்க்கையும் புலிப் பயங்கரவாதத்தை நசுக்குதல்’ என 2012 இல் வெளியிடப்பட்ட கோட்டாவின் போர்” என்ற புத்தகத்தையும் வெளியிட்டது பத்திரிகையாளர் சி.ஏ. சந்திரபிரேமா ஆகும்.

அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது “2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதில் இருந்து வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

2019 நவம்பரில் நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்தன.”

நான் பதவியேற்றவுடன் இலங்கையிலும் முழு உலகிலும் பரவிய கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் எனது இரண்டரை ஆண்டுகால ஆட்சிக் காலம் முழுவதும் செலவழிக்கப்பட்டது.

2022 மார்ச் மாத இறுதியில் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தடுப்பூசி பிரச்சாரம் முடிவடைந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியபோது சதிகாரர்கள் என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று, இலங்கையில் வெளிநாட்டுத் தலையீடும், உள்ளக அரசியலின் சூழ்ச்சியும் உள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக தேர்தல் மூலம் மட்டுமே அதிகாரங்கள் மாற்றப்பட்ட நிலையில் என்னை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரசாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்தது.

உளவுத்துறை தோல்வி மற்றும் சட்டம் ஒழுங்கு தவறு தனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, சுரேஷ் சாலியை உளவுத்துறையின் தலைவராகவும், கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளராகவும், சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாகவும் ஆக்கியது தவறு, ஆனால் அதனை உணர்ந்து கொள்ள மிகவும் தாமதமாகிவிட்டது.

எனவே 2022 நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை.சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் முதல் அனுபவத்தை இந்தப் புத்தகம் விளக்குகின்றது.

அந்தவகையில் இந்தப் புத்தகம் இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி வெளிநாட்டினருக்கும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

2006 முதல் 2015 இல் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட வரை இலங்கையின் அரசியலை ராஜபக்ச சகோதரர்கள் கட்டுப்படுத்தினர்.இதனை அடுத்து 2019 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய 2022 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

ராஜபக்சக்கள் மீதான கோபம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு என்பனவே இதற்கு காரணமாக இருந்தன.

2022 ஜூன் 13 அன்று, நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவில் தஞ்சம் புகுந்தார். இதனை அடுத்து சிங்கப்பூர் சென்ற அவர் இராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதன் பின்னர் தாய்லாந்து சென்றார்.

சுமார் 50 நாட்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த கோட்டாபய ராஜபக்ஷ, போராட்டக்காரர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாடு திரும்பினார். இதன் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களத்தில் மீண்டும் களமிறங்குவததாக கூறி விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.