அமைச்சரவையை தேர்தலை ஒத்திவைப்பதற்கான கருவியாக பயன்படுத்துகின்றார் ஜனாதிபதி

தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு கருவியாக அமைச்சரவையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவதாக ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இம்மாதம் 05 ஆம் திகதி தேர்தல் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம் ஜனநாயகத்திற்கு பாதகமானது எனவும் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாயை ஒதுக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் குறித்த நிதி ஒதுக்கீடுகளை பாதியாகக் குறைக்க அமைச்சரவைக்கு உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாயும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 11 பில்லியன் ரூபாயும் செலவாகும் என்ற மதிப்பீடுகள் 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி குழுவின் அறிக்கை கிடைத்த பின்னரே மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது என மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.