தரம் 8 முதல் பரீட்சாத்த திட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஓக்டோபர் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை கொண்டுவர முதலில் முடிவு எடுக்கப்பட்டதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாடசாலை மட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை கொண்டுவருவதானது கல்வி முறையில் புதிய மாற்றம் ஏற்படும் என்பதோடு மாணவர்களின் எதிர்காலத்திற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட திட்டங்கள் பாடத்திட்டத்தில் உள்ளடக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மைக்ரோசொப்டின் ஆதரவுடன் மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்தோடு இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பாடதிற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.