CBC TAMIL NEWS : அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.
அரசியலமைப்பிற்கு முரணான 30 க்கும் மேற்பட்ட சரத்துக்கள் மற்றும் குறைபாடுகளை உயர் நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ள போதும் அதனை உள்ளடக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய பின்னர் சட்டமூலத்தை தொடர நீதிமன்றம் அனுமதித்துள்ள போதும் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம் என தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் கவலைகளை நிவர்த்தி செய்யாமல் சட்டத்தை இயற்றுவது, அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை எழுப்பியுள்ளது.
ஆகவே இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சட்டமூலத்தின் மீதான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றில் கடந்த 24 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.