பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் – சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதியமைச்சுடன் நடந்த கலந்துரையாடல் வெற்றியளிக்காததை அடுத்து மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, மருத்துவர்கள் சங்கம் தவித்த ஏனைய 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

அனைவருக்கும் DAT கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இன்று காலை நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என அறிவித்துள்ள சுகாதார தொழிற்சங்கங்கள், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை 35 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரமாக ஆக உயர்த்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு ஜனவரி 08 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தது.

இருப்பினும் தமக்கும் குறித்த கொடுப்பனவுகளை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.