மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளில் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

அமைதியின்மை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள் என பொலிஸ்மா அதிபரை குறிப்பிட்டு அருந்திக பெர்னாண்டோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஆகவே அவரது கூற்றுக்கள் உண்மையாக இருந்தால், அத்தகைய நபர்களின் பெயர் பட்டியலை பொலிஸ் மா அதிபர் வழங்க வேண்டும் என அக்கட்சியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதுபோல் சந்தேகத்திற்குரிய 400 பேரில் 150 பேர் ஜே.வி.பி ஆதரவாளர்கள் என்றால் எஞ்சிய 250 பேர் யாருடைய தரப்பினர் என்றும் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பது குறித்த விவாதம் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக எரிபொருள், எரிவாயு, மின்சாரம், பால் மாமற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் இன்றி பொதுமக்கள் வீதிகளில் நிற்கும் வேளையில் நாடாளுமன்றம் அவர்களின் குறைகளை விவாதிக்கிறது என்றும் சாடினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வுகள் வழங்க நாடாளுமன்றம் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

அத்தோடு வரிசையில் நிற்கும் போது சுகவீனமுற்ற 9 பேர் உயிரிழந்தமை தொடர்பில் நாடாளுமன்றம் விவாதிக்கவில்லை என்றும் டில்வின் சில்வா கேள்வியெழுப்பினார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap