நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும் அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நியமித்ததன் பின்னர், அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதன்படி புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், புதிய அரசாங்கம், நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நேரத்தில் மக்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாமல், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வார தொடக்கத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறைக்கான மூல காரணத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இடம்பெற்ற கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல் நடவடிக்கைகள், சொத்துக்களை அழித்தல் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, புலனாய்வு பிரிவு தலைவர் உள்ளிட்டவர்களை அழைத்து பாதுகாப்பு சபை கூட்டம் நடத்தப்பட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும் வன்முறைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்குத் திட்டமிட்ட, உதவிய, ஊக்குவித்த மற்றும் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.