அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆளும்கட்சி பிரதமர் மீது கடுமையாக சாட்டியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதை அல்லது ஜனாதிபதியாக வருவதையோ தடுக்கும் வகையில் இவ்வாறான திருத்தங்கள் கொண்டுவர கூடாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 19 ஆவது திருத்தம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு வழிகோலியது என ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க உட்பட எவரும் மேற்படி தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்கவில்லை என்றும் இவர்களே மீண்டும் ஒரு திருத்தத்தை கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் கடுமையாக சாடினார்.

மேலும் 21வது திருத்தத்தை கொண்டுவரும் முயற்சி வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

21வது திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம் என தாம் கூறவில்லை ஆனால் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து விவாதிக்கக்கூடிய பொருத்தமான சூழல் முதலில் தேவை என சாகர காரியவசம் மீண்டும் வலியுறுத்தினார்.

2020 இல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னர் 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறித்து 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது கடந்த திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நேற்று நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap