ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த நிலையில் பிரதமர் பதவி விலகியுள்ளதால் ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை மட்டுமே எஞ்சி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதன்கிழமை (11) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதிக்கப்படும் என கூறினார்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், அதன் பின்னர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

இந்நிலையில் 15 அமைச்சர்களை கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap