அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
எனவே புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஆலோசிக்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட கூட்டம் நடைபெற உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் இராஜினாமாவின் பின்னர் அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசாங்கத்தை எவ்வாறு அமைப்பது என்பது குறித்தும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அடுத்த வாரம் எதிர்க்கட்சிகளுடன் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.