தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்க மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

1000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஹர்த்தாலில் இணையவுள்ள நிலையில், பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இருப்பினும் போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், எரிசக்தி, துறைமுகம் உட்பட பல துறைகள் மற்றும் அலுவலகங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் டீசல் தட்டுப்பாடு காரணமாகவும், ஹர்த்தாலுக்கு ஆதரவாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகியுள்ளது.

இருப்பினும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கங்கள் ஹர்த்தாலில் ஈடுபடப்போவதில்லை என உறுதி செய்துள்ளதாக அதன் முகாமையாளர் கூறினார்.

ஹர்த்தாலில் ஈடுபடுவது குறித்து எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தொழிற்சங்கங்கள் தமக்கோ அல்லது ரயில்வே பொது முகாமையாளருக்கோ அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து இன்றைய ஹர்த்தால் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு நள்ளிரவு 12 மணி முதல் நாடு தழுவிய ஹர்த்தாலில் இணைந்தது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

நள்ளிரவு 12 மணி முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து சேவையில் இருந்து விலகியுள்ள அதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கையில் கறுப்பு பட்டி அணிந்து பணிபுரிவதாக அறிவித்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அத்தோடு ஒரு நாள் சேவை உள்ளிட்ட சேவைகள் இன்று இடம்பெறாது என்றும் கடவுச்சீட்டு தொடர்பான ஏனைய சேவைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவாக உள்ளக ஊழியர்கள் இன்று பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

புற்றுநோய், மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைவரும் இன்று ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

பல ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கித் துறை ஊழியர்களும் ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளனர்.

அத்தோடு இலங்கை தபால் சேவையில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap