தோல்வியடைந்த ஜனாதிபதியாக தன்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
போராட்டங்களை நடத்தி தன்னை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்த போதிலும் எஞ்சிய பதவிக் காலத்தில் இரண்டு வருடங்களையும் முடிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இருப்பினும் மீண்டும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்து நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருந்தால் முழுமையான அதிகாரம் காணப்பட வேண்டும் இல்லை என்றால் அதனை முழுமையாக இரத்து செய்து வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையை அமுல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.