இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறைந்தபட்சம் 3 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் மாத இறுதிக்குள் அவர்களுடன் உடன்படிக்கையை எட்டுவது குறித்து இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவத்தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அண்மையில் கூறியது.
இதன்படி, இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்படவேண்டும் என்றும் அதன் பின்னர் இலங்கையுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.
குறிப்பாக வரியில் திருத்தங்கள் மற்றும் வருவாயை அதிகரிக்க VAT அதிகரிப்பு ஆகியவற்றையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்மொழிந்தது.
அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான VAT வரியை 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்க நிதியமைச்சு நேற்று நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.