அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

வங்கி அமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பல சிரமங்களை இறக்குமதியாளர்கள் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

இந்தியாவின் கடனின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ($ 300 மில்லியன்), மருந்து ($ 200 மில்லியன்) மற்றும் தொழில்துறை மூலப்பொருட்கள் ($ 500 மில்லியன்) இறக்குமதிக்காக ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஒதுக்கீடு பின்னர் தொழிற்சாலை மூலப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் அவசிய தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு இடமளிக்கும் வகையில் திருத்தப்பட்டது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில்துறை மூலப்பொருட்களில் காகிதம் மற்றும் அச்சுப் பொருட்கள், பக்கேஜிங் பொருட்கள், ஆடைத் தொழிலுக்கான மூலப்பொருட்கள், கார்போனிக் அல்லாத இரசாயனங்கள், சிமென்ட்/கிளிங்கர், மின்மாற்றிகளுக்கான மூலப்பொருட்கள், உரம் மற்றும் இரும்பு ஆகியவை அடங்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் முக்கியமான திட்டங்கள் மற்றும் ஏற்றுமதித் தொழில்களைத் தொடர்வதற்கு இந்தப் பொருட்கள் தேவைப்படுவதால் அவற்றினை இறக்குமதி செய்ய இந்தியாவின் கடனை பயன்படுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து தற்போதைய தேவைகளின் அடிப்படையில் மற்றபொருட்களுக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap