மட்டக்களப்பில் பொலிஸ் நிலைய காவலில் இருந்த போது உயிரிழந்த விதுசனின் வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு பின்னர், இளைஞனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி பீட்டர் போல் முன்னிலையில் உத்தரவிட்டார்.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து விதுசன் என்ற இளைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார்

இதன்போது குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயிற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது, அதனை குறித்த இளைஞனின் பெற்றோர் மறுத்திருந்ததுடன் தனது மகனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன் வழக்கு விசாரணைகளில் போது இளைஞனின் உடல் பரிசோதனைகாக சடலம் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, மகனின் மரணம் குறித்த விடயங்களை மூடிமறைப்பதற்கு பொலிஸார் எத்தனிப்பதாக விதுசனின் பெற்றோர் விசனம் வெளியிட்டனர்.

விதுசனின் மரணம் இடம்பெற்று எதிர்வரும் 03 ஆம் திகதியுடன் ஒருவருட நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் ஜூலை மாதம் ஆறாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap