மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க நிதி கிடைக்கவில்லை!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை என முல்லைத்தீவு நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது

இதன்போதே அகழ்வுப் பணியை மீள ஆரம்பிக்க இன்னும் நிதி கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வுப்பணி கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் 6 ஆம் திகதிமுதல் தொடந்து 11 நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்டது.

இதனை தொடந்து மீண்டும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டன.

இதனை தொடந்து மூன்றாவது கட்ட அகழ்வு பணியை மார்ச் மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட போதும் நிதியுதவி கிடைக்காததால் தொடந்து தாமதமாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.