தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக வென்றது நியூசிலாந்து !!
CBC TAMIL NEWS :
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முதன்முறையாக வென்றுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹமில்டன் மைதானத்தில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சிற்காக 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை தொடந்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 211 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க 31 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக டேவிட் பெடிங்கம் அதிகபட்சமாக 110 ஓட்டங்களை குவிக்க பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்களை சாய்த்தார்.
இதன் பின்னர் 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி, நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவடைய 20 ஓவர்கள் இருந்த நிலையில் 3 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களை பெற்றார். இது வில்லியம்சனின் தனது 32வது டெஸ்ட் சதமாகும். வில் யங் 60 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்சிலும் 9 விக்கெட்களை வீழ்த்திய அறிமுக வீரர் வில்லியம் ஓ ரூர்க் தெரிவு செய்யப்பட்டார்.