பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என முடிவை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது கருத்து தெரிவித்த அவர், 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 19 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வு செய்ய நிபுணர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முடிவு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தந்திரம் என தெரிவித்து வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
விமானப் பயணிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பான விதிமுறைகள் தொடர்பாக நிபுணர் குழு பல திருத்தங்களைச் செய்தது என்று அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான தீர்மானங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.