அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்ட 11 பேர் கொண்ட கட்சிகளின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மைத்திரிபால சிறிசேன மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கொள்கையளவில் உடன்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
இதன்படி, முதற்கட்டமாக, தற்போது ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கூட்டத்தில் 11 கட்சிகளின் தலைவர்கள் இறுதி தீர்மானம் எடுக்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.