நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
அத்தோடு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நாட்டில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்தும் கவலையடைவதாக இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாகவும் அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவர்களையும் அவர்களை தூண்டிவிடுபவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வலியறுத்தியுள்ளது.
மேலும் பிரதமர் இராஜினாமா செய்த பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை அமுல்படுத்துமாறும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுமாறும் அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.